பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிப்பு

ஒரே நாளில் 11 பில்லியன் தொன் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிப்பு

by Bella Dalima 03-08-2019 | 5:33 PM
அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் மிகவும் வேகமாக உருகி வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 7.5 செ.மீ. உயர்ந்துள்ளதாக National Academy of Sciences கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த செயற்கைக்கோள்கள் அளித்த தகவல்களும் இதனை உறுதி செய்திருந்தன. கடல் நீர்மட்டம் 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை நிலையாக இருந்தது. அதன்பின், உலக வெப்பமயமாதலின் விளைவால் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 24 மணி நேரத்தில் 11 பில்லியன் தொன் உருகி கடல் நீர்மட்டம் அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி இந்த பாரிய பனி உருகல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கிரீன்லாந்தில் 217 பில்லியன் தொன் கணக்கான பனிப்பாறைகள் உருகியுள்ளன. இது குறித்து நாசா கூறுகையில்,
கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் மிகப்பெரிய உருகும் நிகழ்விற்குத் தயாராக உள்ளன. பில்லியன் தொன்களில் உருகும் நீர் அட்லாண்டிக் கடலில் கலப்பதால் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. அதிக வெப்பத்தின் காரணமாகவே, அதிக அளவில் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும்
என எச்சரித்துள்ளது