by Staff Writer 03-08-2019 | 3:41 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் மத்திய கடற்பகுதிகளில் நாளை மறுதினம் (05) முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு வரையிலான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களும் கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.