மக்கள் சக்தி: அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படாத மக்களின் பிரச்சினைகள்

by Staff Writer 02-08-2019 | 8:24 PM
Colombo (News 1st) அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படாத மக்களின் பிரச்சினைகளைத் தேடி இன்றும் மக்கள் சக்தி குழுவினர் கேகாலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற மக்கள், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களின் பிரச்சினைகளை மக்கள் சக்தி குழுவினரிடம் தெரிவித்தனர். கேகாலை மாவட்டத்திற்கு சென்றுள்ள குழுவினர் பேஹேரெல்ல கிராமத்தில் முறையான போக்குவரத்து மற்றும் பாதை வசதியின்மையால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குவதை அவதானித்தனர். அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பில் கிதுல்கல கிராம மக்கள் தமது விசனத்தை வெளியிட்டனர். மக்கள் சக்தியின் மற்றுமொரு குழுவினர் இன்று புத்தளம் மாவட்டத்திலுள்ள குரலற்ற மக்களை நாடிச்சென்றனர். லீகொலவெவ, கபுபடியாவ , கல்லடி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். குடிப்பதற்கு சுத்தமான நீர் கூட இன்றி தவிக்கும் மக்களை அம்பாறையில் மக்கள் சக்தி குழுவினர் சந்தித்தனர்.