நீதிமன்றத்தில் ஆஜராகாத விஷாலுக்கு பிடியாணை

நீதிமன்றத்தில் ஆஜராகாத விஷாலுக்கு பிடியாணை

by Bella Dalima 02-08-2019 | 5:00 PM
நடிகர் விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விஷால் பலதரப்பட்ட தொகையை பண பரிவர்த்தனை செய்திருக்கிறார். அதற்கான வருமான வரி கணக்கை செலுத்தவில்லை என்றும், வருமான வரி பிடித்தம் செய்த அந்த தொகையையும், வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், 5 வருட வருமான வரித்தொகை செலுத்துமாறும், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்த விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜர் ஆகாததால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகவில்லை. இந்நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நடிகர் விஷால் ஆஜராகாமல், தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தொடர்ந்து 2-முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வளர்மதி தொடர்ந்து இரண்டு முறை ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும், இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.