ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பை கைச்சாத்திடாதிருக்க ரணில் இணக்கம்

ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பை கைச்சாத்திடாதிருக்க ரணில் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2019 | 8:02 pm

Colombo (News 1st) செயற்குழு கூட்டத்தில் எழுந்த எதிர்ப்புடன் ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பை கைச்சாத்திடாதிருப்பதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பை உருவாக்கும் முன்னர், திருத்தங்கள் அடங்கிய உத்தேச யாப்பை செயற்குழுவில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க இணங்கியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (01) கூடியபோது 60 உறுப்பினர்களில் 12 பேர் மாத்திரமே உத்தேச யாப்பிற்கு ஆதரவு வழங்கினர்.

இந்த தீர்மானத்திற்கு ஐந்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், உத்தேச யாப்பில் பல விடயங்களில் திருத்தம் அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்கமைய, புதிய கூட்டமைப்பு தொடர்பான உத்தேச யாப்பிற்கான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்றிரவே அனுப்பி வைத்தார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது என அமைச்சர் அஜித் பி.பெரேராவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கூட்டமைப்பு சிறிகொத்த முகவரியில் பதிவு செய்யப்படவேண்டும் எனவும் , நிறைவேற்றுக் குழுவில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையில் 51 வீதம் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உத்தேச தலைமைத்துவ சபையில் 10 உறுப்பினர்கள் காணப்பட்டால், அதில் 6 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு மற்றும் செயற்குழுவின் ஒன்றிணைந்த சந்திப்பின் போது, ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவராக ஜனாதிபதி வேட்பாளர் இருக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உத்தேச யாப்பு திருத்தத்தை செயற்குழுவிற்கு சமர்ப்பித்து அனுமதி பெறும் வரை கூட்டமைப்பை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடக்கூடாது எனவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்புத் திருத்தத்தை அமைச்சர் சுஜீவ சேனசிங்க எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.

தலைமைத்துவ சபையின் அங்கத்தவர்களில் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் பெயரிடப்பட்டு அனுமதிக்கப்படும் உறுப்பினரே கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், கூட்டமைப்பின் தலைமையகம் சிறிகொத்தவாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ள பங்காளிக் கட்சிகளுக்கும் தலைமைத்துவ சபையில் இடம்பெறும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தேச கூட்டமைப்பின் யாப்பிற்கு செயற்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்படும் நிலையில், புதிய கூட்டமைப்புடன் ஒன்றிணையவுள்ளதாகக் கூறப்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்புடன் ஒன்றிணைவதாகக் கூறப்படும் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்றிரவு 9 மணியளவில் ஆரம்பமான இந்த கலந்துரையாடல் இரவு 11.30 அளவில் நிறைவு பெற்றது.

கலந்துரையாடல் நிறைவு பெற்ற பின்னர் அலரி மாளிகையில் இருந்து வௌியேறியவர்கள், ஊடகங்களுக்கு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்