இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் தாமதம்: சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் தாமதம்: சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2019 | 6:07 pm

Colombo (News 1st) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் தாமதம் நிலவுவதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தலைவர் சரத் டாஷ் (Sarat Dash) தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று முற்பகல் சந்தித்த போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை அகதிகளை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு 6.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதி தமது அமைப்பிடம் உள்ளதாக புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தலைவர் கூறியுள்ளார்.

அகதிகளை நாட்டிற்கு மீள அழைத்து வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி புரிவதாக இதன்போது வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் நாடு திரும்பும் போது, அவர்கள் நாட்டில் தங்குவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம் என அவர் கூறியுள்ளார்.

நாடு திரும்புவோர் இலங்கையிலும் அகதிகளாக வாழ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்