நீரை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் விவசாயிகள்

மக்கள் சக்தி: விவசாயத்திற்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் விவசாயிகள்

by Staff Writer 01-08-2019 | 8:54 PM
Colombo (News 1st) விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக அதிகாரிகள் எவ்வளவு வாக்குறுதிகளை வழங்கினாலும், விவசாயத்திற்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினரிடம் விவசாயிகள் தமது பயிர் செய்கைக்கான நீரைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். சிலாபம் - ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக வயல் நிலத்திற்கு போதுமான நீர் கிடைக்காமையினால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் உடப்பு, ஆராய்ச்சிக்கட்டு உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் சென்று மக்கள் சக்தி குழுவினர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர். தமது பிரச்சினைகளை எத்தனை தடவை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் அதனை செவிமடுக்கவில்லை என கேகாலை மாவட்டத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தின் ஆனமடுவ - பன்னல்கம கிராமத்திற்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர், அங்கு வாழும் 200-க்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர். தமது வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்களுக்கு நீரைப் பெற்றுக்கொள்ள நீர்பாசன கட்டமைப்பை சீரமைக்குமாறு இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.