கழிவுகள் வியாபாரத்தை நியாயப்படுத்தும் பங்குதாரர்

கழிவுப்பொருள் வியாபாரத்தை நியாயப்படுத்தும் பங்குதாரர்

by Staff Writer 01-08-2019 | 8:23 PM
Colombo (News 1st) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள வௌிநாட்டுக் கழிவுகள், கொழும்பு துறைமுகத்திலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை இறக்குமதி செய்த சம்பவத்தின் பங்குதாரரான Ceylon Metal Processing நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் சமூக வலைத்தளங்களுக்கு வௌியிட்டுள்ள கருத்தில் இது இலாபம் மிகு வியாபாரம் என குறிப்பிட்டுள்ளார். இது அந்நியசெலாவணியை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வியாபாரம் என, நாட்டிற்கு வௌிநாட்டுக் கழிவுகளைக் கொண்டு வந்த ஒரு தரப்பான அந்நபர் கூறியுள்ளார். எனினும், இவரது கையொப்பத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தின் உதவி பொது முகாமையாளருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இதற்கு முற்றிலும் வேறுப்பட்ட விடயத்தையே குறிப்பிட்டிருந்தார். தமது நிறுவனம் எதிர்பாராத நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சசிகுமரன் முத்துராமன் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். எனவே, துறைமுகத்திலுள்ள கொள்கலன்களுக்கு அறவிடப்படும் கட்டணம் மற்றும் தாமதக் கட்டணம் தொடர்பில் அவர் நிவாரணம் கோரியிருந்தார். அந்நியசெலாவணியை ஈட்டிக்கொள்ளும் சிறந்த வியாபாரமொன்று எவ்வாறு நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் என்பது மக்களுக்குள்ள பிரச்சினையாகும். பயன்படுத்திய மெத்தைகள் எனக்கூறி இறக்குமதி செய்யப்பட்ட கழிவுப்பொருட்களில் என்ன காணப்படுகின்றது என்பது தற்பொழுது நாட்டிற்கு அம்பலமாகியுள்ளது. அதனை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக பல்வேறு தரப்பினரும் கழிவுப்பொருள் வியாபாரத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்.

ஏனைய செய்திகள்