ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழப்பு

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழப்பு

by Staff Writer 01-08-2019 | 8:41 AM
Colombo (News 1st) அல் கைதா அமைப்பின் நிறுவுனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் (Hamza Bin Laden) உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹம்ஸா பின்லேடனின் மரணம் தொடர்பிலான விரிவான தகவல்கள் இதுவரை அமெரிக்காவால் வெளியிடப்படவில்லை. ஹம்ஸா பின்லேடன் (30 வயது) தொடர்பில் தகவல்கள் வழங்குவோருக்கு 1 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்கப்படும் என, அமெரிக்க அரசாங்கத்தால் கடந்த பெப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக, ஹம்ஸா பின்லேடன் குரல் பதிவுகளையும் காணொளிகளையும் வௌியிட்டிருந்தார். 2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின்போது ஆப்கானிஸ்தானில் அவர் தங்கியிருந்ததாகவும் பின்னர் அமெரிக்கா தலைமையிலான தேடுதலின்போது பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது தந்தையான ஒசாமா பின்லேடன் 2011ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.