வௌிநாட்டுக் கழிவுப்பொருட்கள் தொடர்பில் தடை உத்தரவு

by Staff Writer 31-07-2019 | 11:04 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும் கொழும்புத் துறைமுகத்திலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள வௌிநாட்டுக் கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் கொண்டுசெல்வதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோத்தாகொட மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி, கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை வௌிநாடுகளுக்கு திருப்பியனுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுற்றாடல் நீதி மையம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மனுவின் பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஹேலீஸ் பிரி சோன் லிமிட்டட், ஈ.டி.எல். பிறைவட் லிமிட்டட், இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.