கீரிமலை ஆலய பகுதியில் குப்பைகளைக் கொட்டும் செயற்பாட்டிற்கு எதிராக கையெழுத்து வேட்டை

by Staff Writer 31-07-2019 | 8:30 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் குப்பைகளைக் கொட்டும் செயற்பாட்டிற்கு எதிராக இன்று கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. சமூக மேம்பாட்டிற்கும் நீதிக்குமான மக்கள் இயக்கம் இந்த கையெழுத்து வேட்டையை ஏற்பாடு செய்திருந்தது. கீரிமலை ஆலய புனித பூமியை அண்மித்த பகுதியில் குப்பைகள் கொட்டும் செயற்பாட்டை தடுக்கும் முகமாக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை தௌிவூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதேவேளை, தெல்லிப்பளை வைத்தியசாலை வளாகத்தில் கழிவுகளை எரிக்கும் காட்சி இன்று நியூஸ்ஃபெஸ்ட் கெமராவில் பதிவானது. வைத்தியசாலை கழிவுகளே இவ்வாறு எரிக்கப்படுவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். யாழ். வைத்தியசாலை கழிவுகளும், தெல்லிப்பளை வைத்தியசாலை கழிவுகளும் அங்குள்ள இயந்திரம் மூலம் அழிக்கப்படுவதாகவும், ஒரு தடவை அனுராதபுரம் வைத்தியசாலை கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வௌிநாட்டுக் கழிவுகள் தெல்லிப்பளை வைத்தியசாலை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயத்தை தான் நிராகரிப்பதாகவும், அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெறவில்லையெனவும் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.