இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம்

இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம்

by Bella Dalima 31-07-2019 | 5:23 PM
இந்திய மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்கு பிறகு முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவர்கள் ‘தலாக்’ என்று 3 தடவைகள் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில், முத்தலாக் தடை சட்டமூலம் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பின்னர் குற்றச்சாட்டிற்கு உள்ளான திருமணமான ஆண்களுக்கு பிணை கிடையாது என்ற சரத்து நீக்கப்பட்டது. இதனால் முத்தலாக் தடை சட்டம் அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் முத்தலாக் தடை சட்டமூலம் நிறைவேறியது. இந்த பிரேரணை விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் கிடைத்ததால், முத்தலாக் பிரேரணை நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். இந்த பிரேரணை கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் நேற்று (30) வாக்கெடுப்பு இடம்பெற்றது. விவாதங்களின் போது திருத்தங்கள் ஏற்கப்படாததால், அதிமுக, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.