ஏப்ரல் 21 தாக்குதலின் சந்தேகநபர்களை FBI-ஐ சேர்ந்த இருவர் சந்தித்ததாக விமல் வீரவன்ச சபையில் தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதலின் சந்தேகநபர்களை FBI-ஐ சேர்ந்த இருவர் சந்தித்ததாக விமல் வீரவன்ச சபையில் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Jul, 2019 | 7:55 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர் சந்தித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்தார்.

2019 ஜூலை 24ஆம் திகதி காலை 9.30-க்கு FBI-ஐ சேர்ந்த இருவர் வெலிசரை கடற்படை முகாமிற்கு சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சந்தித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

மேல் மட்டத்திலிருந்து TID அதிகாரிக்கு விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய அவர்கள் சந்தேகநபர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக FBI-ஐ சேர்ந்தவர்கள் சந்தேகநபர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதிவு செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ACSA, SOFA மற்றும் Millennium Challenge உடன்படிக்கைகள் ஊடாக அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள் பிரவேசித்து சுதந்திரமாக நடமாடுவதற்கும் பொருட்கள் மற்றும் ​சேவை வசதிகளை பெறுவதற்கான கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனைக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள ACSA இணக்கப்பாடுகளுக்கு அமைய அண்மையில் அமெரிக்க விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததுடன், அங்கிருந்து கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த தமது கப்பல்களுக்கும் அவர்கள் பொருட்களை பரிமாறியிருந்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் சிவில் விமான வசதிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள Western Global நிறுவனத்தின் மிகப்பெரியளவிலான இரண்டு விமானங்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் சில வாரங்களுக்கு முன்னதாக இலங்கை வந்திருந்தன. இதில் ஒரு விமானம் குஆம் தீவிலுள்ள அமெரிக்க முகாமில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தது.

அமெரிக்க இராணுவம் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் SOFA உடன்படிக்கை தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சில திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவற்றுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டால் மாத்திரம் SOFA உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதமர் கூறினாலும் ஏற்கனவே இதற்கான அடிப்படை இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

Millennium Challenge Corporation ஊடாகக் கிடைக்கும் 480 மில்லியன் டொலர் நிதியை பயன்படுத்தி காணி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை அரச காணி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் தடுக்கப்பட்டது.

காணி சட்டம் ஊடாக அரச காணிகளை இலகுவாக விடுவித்து திருகோணமலை மற்றும் கொழும்பிற்கு இடையிலான உத்தேச பொருளாதார வலயத்திற்காக கையகப்படுத்தும் நடவடிக்கை இலகுபடுத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

அமெரிக்க அழுத்தங்கள் தொடர்பில் இவ்வாறு கருத்துக்கள் உருவாகி வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule என்பவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து பிரதம நீதியரசரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பாராளுமன்றத்தில் இவரது முயற்சி தொடர்பிலான தகவல்கள் வௌிக்கொணரப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை சந்திப்பதற்கான அவரது முயற்சி தடுக்கப்பட்டது.

இத்தகைய வௌிநாட்டு அழுத்தங்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்