பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டாத மதுபானங்களுக்கு தடை

பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டாத வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய தடை

by Staff Writer 30-07-2019 | 5:23 PM
Colombo (News 1st)  கலால் வரித் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டாத வௌிநாட்டு மதுபானங்களை நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய ஸ்டிக்கர்களை ஒட்டாது இறக்குமதி செய்யப்படும் மதுபான வகைகளை வைத்திருத்தல், களஞ்சியப்படுத்துதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தலும் தடை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு கூறியுள்ளது. முதற்கட்டமாக வௌிநாட்டு மதுபானங்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், விரைவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளுக்கும் இந்த சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 நிறுவனங்கள் வௌிநாட்டிலிருந்து இலங்கைக்கு மதுபானங்களை இறக்குமதி செய்கின்றன. விமான நிலையங்களிலுள்ள வரி விலக்களிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் வௌிநாட்டு மதுபான போத்தல்களிலும் கலால் வரித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை ஒட்டுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தினூடாக சட்டவிரோதமாக வௌிநாட்டிலிருந்து மதுபானங்களை கொண்டு வருவதையும் தரமற்ற மதுபானங்களை பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. புதிய ஸ்டிக்கர்களூடாக பாதுகாப்பு செயன்முறைகளின் கீழ் வௌிநாட்டில் சீல் வைக்கப்பட்டு மதுபான வகைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கலால் வரித் திணைக்களத்திற்கு 66 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.