நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக திலான்

நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக திலான் சமரவீர நியமனம்

by Staff Writer 30-07-2019 | 1:27 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள நியூஸிலாந்து குழாம் இவ்வார இறுதியில் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நியூஸிலாந்து குழாம் இலங்கைக்கு வருகை தந்தவுடன் திலான் சமரவீர அவ்வணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திலான் சமரவீரவின் அனுபவம் இந்தத் தொடரில் தமது அணிக்குத் தேவைப்படுவதாகவும் நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இவ்வாறு மேலதிகப் பயிற்சி ஆலோசகர்களைப் பயன்படுத்தியதாகவும் அந்தத் திட்டம் வெற்றியளித்ததாகவும் நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.