சுங்க அதிகாரிகள் பொறுப்பிலிருந்து தவறியுள்ளனரா?

சுங்க அதிகாரிகள் பொறுப்பிலிருந்து தவறியுள்ளார்களா?

by Staff Writer 30-07-2019 | 8:30 AM
Colombo (News 1st) வெளிநாட்டுக் கழிவுகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு வழி ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வௌியாகியுள்ளன. ஹப் ஒப்பரேஷன் எனப்படும் வணிக கேந்திர நிலையம் எனும் பெயரில் புதிய வர்த்தக நடவடிக்கை, 2013ஆம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி அறிவித்தலினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது. பெயரிடப்பட்ட துறைமுகத்தினூடாக நாட்டிற்குக் கொண்டுவரப்படும் பொருட்களை, விசேட களஞ்சியசாலையில் பெறுமதி சேர்த்து மீண்டும் ஏற்றுமதி செய்வதே இந்த வர்த்தகத்தின் முக்கிய நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தியே கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, இந்த வர்த்தகத்திற்காக நாட்டிற்குக் கொண்டுவரப்படும் பொருட்களை சுங்கத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். மீள் ஏற்றுமதிக்காக ஹப் ஒப்பரேஷனின் கீழ் கொண்டுவரப்படும் பொருட்களை, சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என இது தொடர்பில் நாம் வினவியபோது, தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதிப்படுத்தினார். எனினும், ஹப் ஒப்பரேஷனின் கீழ் கொண்டுவரப்படும் பொருட்களை, மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் அல்லது அதனைவிட உயர்பதவி வகிப்பவரால் மாத்திரமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என, 2014 ஜூலை 7ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவினூடாக சுங்கத் திணைக்களத்தின் அலுவலர் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது. அந்தப் காலப்பகுதியில் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட, எஸ். ராஜேந்திரன் இந்த உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார். அவர் தற்போது திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்படும் பொருட்களை சுங்கத்தினால் பரிசோதிக்க முடியும் என கூறப்பட்ட போதிலும், எஸ். ராஜேந்திரனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 5 வருடங்கள் பழமையான ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு சுங்க அதிகாரிகள் தமது பொறுப்பிலிருந்து தவறியுள்ளார்களா? இல்லாவிட்டால் இந்த உத்தரவினூடாக சுங்க அதிகாரிகளின் பணிகளுக்கு வரையறை ஏற்படுத்தப்பட்டதா?