சவுதியில் சில தொழில்களில் வெளிநாட்டினருக்கு தடை 

சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட சில தொழில்களில் வெளிநாட்டினரை பணி அமர்த்தத் தடை

by Bella Dalima 30-07-2019 | 3:52 PM
சவுதி அரேபியாவில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் குறிப்பிட்ட சில தொழில்களில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் குறிப்பிட்ட வேலைகளில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபிய அரசின் தொழிலாளர் அமைச்சு சார்பில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நான்கு ஸ்டார் மற்றும் அதற்கு மேல் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்களில் முதன்மை பணிகளில் சவுதி அரேபியர்களையே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாரதிகள், கதவு திறப்பவர்கள், சுமை தூக்குபவர்கள் போன்ற பணிகளில் வெளிநாட்டினர் பணி அமர்த்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள், ஆயத்த ஆடைக்கடைகள், வீடு மற்றும் அலுவலக தளபாடக் கடைகள், இலத்திரனியல் பொருட்கள் விற்பனையகம், கைக்கடிகார கடைகள் உள்ளிட்ட 12 வகையான வேலைகளில் வெளிநாட்டினரை அமர்த்த சவுதி அரேபிய அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.