அமெரிக்க உளவுத்துறை தலைமை அதிகாரி இராஜினாமா

அமெரிக்க உளவுத்துறை தலைமை அதிகாரி திடீர் இராஜினாமா

by Bella Dalima 30-07-2019 | 4:09 PM
அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரி டான் கோட்ஸ் (Dan Coats) தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். டான் கோட்ஸ் நேற்று (29) அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். தனது இரண்டரை ஆண்டு பதவிக்காலத்தில் அமெரிக்க உளவுத்துறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவடைந்துள்ளதாகவும் தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இதுவென நம்புவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டான் கோட்சின் இராஜினாமா கடிதத்தை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த மாத இறுதியில் டான் கோட்ஸ் பதவி விலகுவார் எனவும் அவருக்கு பதில் டெக்சாஸ் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஜான் ராட்கிளிப் பரிந்துரை செய்யப்படுவார் எனவும் ட்ரம்ப் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ட்ரம்பிற்கும் டான் கோட்ஸிற்கும் இடையில் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.