மக்கள் சக்திக் குழுவினரை சந்திப்பதற்காக காத்திருந்த மக்கள்

by Staff Writer 29-07-2019 | 10:12 PM
Colombo (News 1st) மக்கள் சக்திக் குழுவினரின் வருகைக்காக சில பகுதிகளில் மக்கள் காத்திருப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். தமது குறைகளைத் தீர்ப்பதற்கு எவரும் முன்வராமையால், அந்தப் பிரச்சினைகளை மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினரிடம் மக்கள் முன்வைக்கின்றனர். அநுராதபுரத்திற்குச் சென்றுள்ள மக்கள் சக்தி குழுவினரை சந்திப்பதற்காக, யஹலேகம பகுதியில் அதிகளவான மக்கள் கூடியிருந்தனர். இந்தக் கிராமத்தில் காணப்படும் குளம் புனரமைக்கப்படாமை தொடர்பில் மக்கள் எமது குழுவினருக்குக் கூறியுள்ளனர். துருவில, மதவாச்சி, நாச்சாதூவ, கெலேகம, நெடியாகம, யஹலேகம மற்றும் எப்பாவல பகுதி மக்களின் குறைகளும் இன்று பதிவு செய்யப்பட்டன. மட்டக்களப்பு - ஆலங்குளத்தில் தற்காலிகக் கூடாரங்களில் வாழும் மக்களை எமது மற்றைய குழுவினர் சந்தித்துள்ளனர். இந்தக் கூடாரங்கள் எப்போதேனும் உடைந்து விழக்கூடும் எனும் அச்சத்தில் வாழ்வதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். வாகரை, நாவலடி, மீராவோடை மற்றும் குஞ்சான்கல்குளம் ஆகிய கிராமங்களுக்கும் மக்கள் சக்தி குழுவினர் இன்று சென்றனர். உருகாமம் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் எமது குழுவினர் கேட்டறிந்துள்ளனர். சேதமடைந்த கூரையைக் கொண்ட கட்டடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரை திம்புலானை கிராமத்தில் மக்கள் சக்தி குழுவினர் சந்தித்துள்ளனர். இந்தக் கட்டடம் விரைவில் புனரமைக்கப்படாவிட்டால் விபரீதங்கள் நேர்வதைத் தடுக்க முடியாது. வெலிமடை, ஊவாபரணகம, திம்புலானை உள்ளிட்ட பகுதி மக்களின் பிரச்சினைகளும் இன்று கேட்டறியப்பட்டன.