துறைமுகத்தில் உரிமையாளரற்ற சந்தேகத்திற்கிடமான 1000க்கும் அதிக கொள்கலன்கள்

by Staff Writer 29-07-2019 | 5:08 PM
Colombo (News 1st) துறைமுகத்தில் உரிமையாளர் அற்ற சந்தேகத்திற்கிடமான 1000க்கும் அதிகமான கொள்கலன்கள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி சாருக்க ஏக்க நாயக்க வழங்கிய சாட்சியத்திற்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகத்திற்கிடமான கொல்களன்களைத் திறக்குமாறு இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. அந்த கொள்கலன்களுக்குள் உக்கிய கழிவுகள் காணப்படுவதாக பரிசோதிக்குமாறு இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, வௌிநாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் பொறுப்பிலுள்ள கொள்கலன்களில் காணப்படும் படிவுகள் மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி வலயத்தில் வைக்கப்பட்டுள்ள வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளில் மக்களுக்கு அல்லது சூழலுக்குப் பாதகமான கழிவுகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஜனக கோதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளை மீண்டும் அந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கடந்த 22ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீண்டும் நாளை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.