முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற தீர்மானம்

மஹபொல மோசடி: முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம் வாக்குமூலம் பெற தீர்மானம்

by Staff Writer 28-07-2019 | 4:00 PM
Colombo (News 1st) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க குறித்த காலப்பகுதியில் அமைச்சுப் பதவிகளை வகித்த இருவரை அழைக்க, கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர். மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பொறுப்பாளர்கள் என்பதற்கிணங்க, அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் தலைவராக செயற்பட்ட முன்னாள் நீதியரசர் கே. ஶ்ரீபவன், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல வாக்குமூலமொன்றை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஆணைக்குழு மூன்று தடவைகள் முயற்சித்ததை தொடர்ந்து எழுத்துமூலம் வாக்குமூலம் வழங்க அவர் இணங்கியுள்ளார். 2015 முதல் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு சொந்தமான காணியொன்றை மாலபே தொழில்நுட்ப நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டிற்கு இணங்க இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு சொந்தமான காணியொன்றை மாலபே தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஒப்பந்தமொன்றை தயாரிக்க உதவிய சட்டத்தரணி கடந்த வௌ்ளிக்கிழமை (26) ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சி வழங்கினார். மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் அப்போதைய தலைவர் முன்னாள் நீதியரசர் கே. ஶ்ரீபவன் முன்னிலையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.