பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

பங்களாதேஷிற்கு எதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை 7 விக்கெட்களால் வெற்றி

by Staff Writer 28-07-2019 | 10:31 PM
Colombo (News 1st) பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்களைப் பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் தடுமாற்றமான​ ஆரம்பத்தை பெற்றதோடு, முதல் 5 விக்கெட்களையும் 88 ஓட்டங்களுக்கு இழந்தது. செளமியா சர்க்கார் 11 ஓட்டங்களுடனும் தமீம் இக்பால் 19 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இன்றைய போட்டியில் 9 ஓட்டங்களை பெற்ற போது பங்களாதேஷ் சார்பாக சர்வதேச ஒருநாள் அரங்கில் 6000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரராக முஸ்பிகுர் ரஹீம் பதிவானார். தமீம் இக்பால் மற்றும் சஹீப் அல் ஹசன் ஆகியோர் இதற்கு முன்னர் இந்த இலக்கை அடைந்துள்ளனர். ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டாலும் முஸ்பிகுர் ரஹீம் தனி ஒருவராகப் போராடி ஓட்டங்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் மெஹிடி ஹசன் மிராசுடன் இணைந்து ஏழாவது விக்கெட்டிற்காக 84 ஓட்டங்களை பகிர்ந்து பங்களாதேஷ் 200 ஓட்டங்களைக் கடக்க வழிவகுத்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 6 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் அரங்கில் 37 ஆவது அரைச்சதத்தை எட்டிய முஸ்பிகுர் ரஹீம் இறுதிவரை களத்தில் நின்று 98 ஓட்டங்களைப் பெற்றார். கடைசி நேரத்தில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சினால் முஸ்பிகுர் ரஹிம் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்ககளை பெற்றது. நுவன் பிரதீப் , அகில தனஞசய மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்காக 11.3 ஓவர்களில் 71 ஓட்டங்களை பகிர்ந்தனர். திமுத் கருணாரத்ன 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். இளம் வீரரான அவிஷ்க பெர்னாண்டோ சர்வதேச ஒருநாள் அரங்கில் கன்னி அரைச்சதத்தை எட்டி, 82 ஓட்டங்களைப் பெற்றார். அஞ்சலோ மெத்தியூஸ் 52 ஓட்டங்களைப் பெற்று மெஹிடி ஹசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குசல் மென்டிஸ் 41 ஓட்டங்களைப் பெற்று சௌம்ய சர்காரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.