லசித் மலிங்க ஓர் அத்தியாயம் - விசேட தொகுப்பு

ஆளுமைகள் விடைபெறுவதில்லை - லசித் மலிங்க ஓர் அத்தியாயம்

by Staff Writer 27-07-2019 | 8:03 PM

ஆளுமைகள் விடைபெறுவதில்லை.

லசித் மாலிங்க எனும் கிரிக்கெட் ஆளுமை சர்வதேச ஒருநாள் அரங்குக்கு விடை கொடுத்தாலும் , ரசிகர்கள் மனதில் என்றுமே நிலைத்திருப்பார் என்பது மாத்திரம் நிதர்சனம். கிரிக்கெட் அரங்கில் வேகப்பந்து வீச்சில் புதிய பரிணாமத்தை தோற்றுவித்த லசித் மாலிங்கவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் திரண்டிருந்தனர். பங்களாதேஷுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றியீட்டியதுடன் , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக குசல் ஜனித் பெரேரா 111 ஓட்டங்களை பெற்றார். நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களை பெற்றார். யோர்க்கர் மன்னனாக கிரிக்கெட் அரங்கில் புகழப்படும் லசித் மாலிங்கவுக்கு நேற்றைய போட்டி கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் சக வீரர்கள் துடுப்பாட்ட மட்டையை உயர்த்திவாறு தமது மரியாதையை இவ்வாறு காணிக்கையாக்கினார்கள். லசித் மாலிங்க எனும் ஆளுமையின் அதிசிறப்பான பந்துவீச்சினால் 315 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய பங்களாதேஷின் இன்னிங்ஸ் 223 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. முதல் ஓவரிலேயே பங்களாதேஷ் அணித்தலைவர் தமிம் இக்பாலின் விக்கெட்டை தனது அபாரமான யோர்க்கர் பந்தால் வீழ்த்திய லசித் மாலிங்க , இலங்கை அணிக்கு மீண்டுமொரு அபார வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பத்தை உருவாக்கினார். இந்தப் போட்டியில் லசித் மாலிங்கவின் இரண்டாவது விக்கெட்டாக சௌமியா சர்க்கார் ஆட்டமிழந்தார். தனது கடைசி ஓவரின் நான்காவது பந்தில் முஸ்டபிஷூர் ரஹ்மானின் விக்கெட்டை லசித் மாலிங்க கைப்பற்றினார். 2004 ஆம் ஆண்டு தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்ற லசித் மாலிங்க , தனது 15 வருட கிரிக்கெட் வாழ்வில் 338 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். மூன்று தடவைகள் ஹெட்ரிக் விக்கெட் பெறுதியை பெற்றுள்ள ஒரேயொரு பந்துவீச்சாளராக வரலாறு படைத்துள்ள லசித் மாலிங்க , சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒன்பதாவது வீரராக பதிவாகியுள்ளார். முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் , சமிந்த வாஸ் ஆகியோருக்கு பிறகு இலங்கை சார்பாக அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பை மாலிங்க பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சம்பியனாகும் போது , லசித் மாலிங்க இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டமை நினைவுகூரத்தக்கது.   இதேவேளை , தமக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சம்பக்க ராமநாயக்கவுக்கு  மாலிங்க உபகாரம் அளித்தார்.