மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிப்பு 

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிப்பு 

by Staff Writer 26-07-2019 | 4:18 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க மேல் மாகாண இரண்டாவது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சசி மகேந்திரன், ஆர்.குருசிங்க மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் சந்தேகநபர்கள் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலீன் ருவன்ஜீவ பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது லக் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 5 கோடியே 31 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை பயன்படுத்தி, Carrom உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை முறையற்ற வகையில் விநியோகித்தமையினூடாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைத்துள்ளதாகத் தெரிவித்து 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.