கோட்டாபயவின் மேன்முறையீடு: தீர்ப்பு தயாரிக்கப்படாததால் தள்ளிப்போடப்பட்டது

by Staff Writer 26-07-2019 | 6:24 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியதனூடாக, இலங்கை அரசிற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஸ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜயசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்தது. எனினும், தீர்ப்பு தயாரிக்கப்படாமை காரணமாக தீர்ப்பை வௌியிடும் திகதியை பிற்போட மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு அரசிற்கு சொந்தமான மூன்று கோடியே 39 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு குற்றச்சாட்டை நீக்கிக்கொள்வதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளமை குறித்து, ஆட்சேபனைகள் காணப்படும் பட்சத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.