கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான சாட்சி விசாரணைகளை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 25-07-2019 | 1:46 PM
Colombo (News 1st) DA ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் சாட்சி விசாரணைகளை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலித்ததை அடுத்தே, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (25) பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, புவனெக அலுவிஹாரே, காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசேட மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் நாளை (26) ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை, குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரு மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்