குருநாகல் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுவிப்பு

by Staff Writer 25-07-2019 | 7:51 PM
Colombo (News 1st) குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டரை இலட்சம் ரூபா பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சாஃபி, பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென குருநாகல் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் சாஃபி மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதக் குழுவொன்றிடம் நிதியைப் பெற்று, அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்நிதியில் சொத்துக்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. மருத்துவர் சாஃபி கடந்த 11 ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.