கழிவுகள் கொண்டுவரப்பட்டமையுடன் தொடர்பில்லை: ETL  

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை என ETL நிறுவனம் அறிக்கை

by Staff Writer 25-07-2019 | 8:43 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க இறக்குமதி வலயத்தில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கழிவுகளை, அடுத்த வழக்குத்தவணை வரை சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் அந்த இடத்திலேயே வைத்திருப்பதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்ட மா அதிபர் இதனை அறிவித்துள்ளார். வெளிநாட்டுக் கழிவுகள் ஊடாக வெளியேறும் நச்சுப்பதார்த்தங்கள் காரணமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ரிட் மனு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் சட்ட ஏற்பாடுகள் மீறப்பட்டு, வெளிநாட்டிலிருந்து கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை செல்லுபடியற்றதாக்குமாறு ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. Hayleys Free Zone நிறுவனம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தாம் சேவையாற்றும் நிறுவனத்திலுள்ள வெளிநாட்டவர்கள் கொண்டுவந்த மெத்தைகள் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியதாக சட்டத்தரணி ரவீந்திரநாத் தாம்பரே குறிப்பிட்டுள்ளார். அவை மீள் ஏற்றுமதிக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமைக்கும் தமது நிறுவனத்திற்கும் இடையில் தொடர்பில்லை என ETL நிறுவனம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தமது நிறுவனம் கப்பலில் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கையை மாத்திரமே முன்னெடுப்பதாகவும், Ceylon Metal Processing Corporation நிறுவனமே இவற்றைக் கொண்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சட்ட ஏற்பாடுகளுக்கமைய, Hayleys Free Zone மற்றும் Ceylon Metal Processing Corporation நிறுவனத்திற்கு இடையிலான தரகராக மாத்திரமே தாம் செயற்படுவதாகவும் ETL நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தப் பொருட்களை கொண்டுவருவதற்கு அல்லது சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தமது நிறுவனத்திற்கு எவ்வித அவசியமும் இல்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கப்பல் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கையில் மாத்திரம் தொடர்புபட்டாலும், கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொடர்பிலான புரிதல் ELT நிறுவனத்திற்கு இருக்க வேண்டுமல்லவா? சட்டவிரோத பொருட்களை ஏற்றிச்செல்வது தொடர்பில் அவர்கள் வெளியிடும் இந்த தெளிவுபடுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இதேவேளை, பாராளுமன்ற பொருளாதார விவகாரம் தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழு நேற்று இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணை குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பொலிஸார் அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் இந்த விடயம் தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பிரான்ஸின் நிறுவனமொன்றும் இலங்கைக்கு குப்பைகளை அனுப்பியுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கொள்கலனுக்கு 1400 டொலர் வழங்கப்படும் என குறிப்பிட்டு பிரான்ஸின் நிறுவனமொன்று 2018 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி இலங்கையின் வர்த்தகர் ஒருவருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலொன்றையும் அவர்கள் இன்று ஊடகங்களுக்கு வௌியிட்டனர்.