பிரதம நீதியரசர் ஐ.நா-வின் விசேட பிரதிநிதியை சந்தித்தமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

பிரதம நீதியரசர் ஐ.நா-வின் விசேட பிரதிநிதியை சந்தித்தமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2019 | 8:06 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்தித்தமை தொடர்பில் பாராளுமன்றத்திலும் வௌியிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி Clément Nyaletsossi Voule நாட்டின் பிரதம நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (24) வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது.

நீதிபதிகளை சந்திப்பது தொடர்பான விடயங்களைக் குறிப்பிட்டு வௌிவிவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றை சபையில் சமர்ப்பித்து எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து, சபாநாயகரின் தலையீட்டில் மேல் நீதிமன்ற நீதிபதிகளுடனான சந்திப்பு தவிர்க்கப்பட்டது. எனினும், விசேட பிரதிநிதி பிரதம நீதியரசரை சந்தித்துள்ளார்.

பிரதம நீதியரசருடனான இந்த சந்திப்பு தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

சர்வதேச அமைப்பு மற்றும் நபர்களுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கையில், வெளிவிவகார அமைச்சூடாகவே அந்த விடயங்கள் இடம்பெறும். அவ்வாறு வருவோர் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. நீதிமன்றத்திற்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படும்? நீதிமன்ற தீர்ப்புகளும் தீர்மானங்களும் இங்கேயே எடுக்கப்படுகின்றன. எவரேனும் வருகின்றபோது, ஏதேனும் விடயங்கள் குறித்து அங்குமிங்குமிருந்து அறிந்துகொள்வதை விட, கிணற்றுக்கருகிலிருந்து பேசுவதைவிட சரியான ஒருவரிடம் வினவினால் விடயங்களைக் கூறுவார். விடயங்களைக் கூறுகின்றோமே தவிர, அவர்கள் கூறுபவற்றை நாம் முன்னெடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு கூறுவதும் இல்லை.

நீதி அமைச்சர் இவ்வாறு கூறினாலும், பிரதம நீதியரசர் ஐ.நா-வின் பிரதிநிதியை சந்தித்தமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வௌியிட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்