கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து பிரித்தானியா விசாரணை

by Staff Writer 24-07-2019 | 12:40 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அந்நாட்டின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியாவின் 'டெலிகிராப்' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. மீள் சுழற்சிக்காக பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கொள்கலன்களுக்குள் இருந்து மனித உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்புவதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து, இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 111 கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்த கொழும்புத் துறைமுகத்திலுள்ள பிரிவொன்றிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வந்தமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோதே இந்தத் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, 'டெலிகிராப்' பத்திரிகை வௌிக்கொணர்ந்துள்ளது. அந்தக் கொள்கலன்களில் மெத்தைகளுடன் சத்திர சிகிச்சைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் கொண்டுவரப்பட்ட போர்வையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் அபாயகரமானது என மத்திய சுற்றாடல் அதிகார சபையை மேற்கோள்காட்டி 'டெலிகிராப்' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. பிரித்தானியாவின் மனித உடற்பாகங்கள் இந்தக் கொள்கலன்களில் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டால், வைத்தியசாலைக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் சர்ச்சையை எதிர்கொண்டுள்ள NHS வைத்தியசாலைகளின் கழிவுப்பொருட்கள் என நம்ப முடியும் எனவும் இந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்