முறிகள் மோசடி: அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை குறித்த உத்தரவு 9ஆம் திகதி

முறிகள் மோசடி: அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை குறித்த உத்தரவு 9ஆம் திகதி

முறிகள் மோசடி: அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை குறித்த உத்தரவு 9ஆம் திகதி

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2019 | 2:02 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பிலான வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிப்பது தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் 9ஆம் திகதி பிறப்பிப்பதாக முதலாவது மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.

நீதிமன்றம் இதற்கு முன்னர் வௌியிட்டிருந்த உத்தரவிற்கமைய, அர்ஜுன மகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

எனினும், பிடியாணை பிறப்பிப்பது தொடர்பிலான கோரிக்கையை சத்தியக்கடதாசி ஊடாக முன்வைக்குமாறு முதலாவது மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, சிங்கப்பூரிலுள்ள வழக்கின் 10ஆவது பிரதிவாதியான அஜான் கார்தி புஞ்சிஹேவாவுக்கு நீதி அமைச்சின் செயலாளர் ஊடாக அறிவித்தல் விடுக்குமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு அறிவித்தல் விடுப்பது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் அடங்கிய முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் 4 மற்றும் 6ஆம் பிரதிவாதிகளான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெஃப்ரி அலோசியஸ் ஆகியோரின் தாய்மொழி சிங்களம் இன்மையால், சட்டமா அதிபர் வழங்கியுள்ள குற்றப் பத்திரிகையை ஆங்கில மொழியில் வழங்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கோரியுள்ளார்.

இதேவேளை, 9ஆவது பிரதிவாதியான முத்துராஜா சுரேந்திரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குற்றப்பத்திரிகையை தமிழில் வழங்குமாறும் 8 ஆவது பிரதிவாதியான ரஞ்சன் ஹூலுகல்ல சார்பில் ஆஜரான சட்டத்தரணி குற்றப்பத்திரிகையை ஆங்கில மொழியில் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்களுக்கு சரியான தௌிவை வழங்குவது சட்டமா அதிபரின் பொறுப்பு என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வழக்கு விசாரணை தினத்தில் குற்றப்பத்திரிகைகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்