சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சிக்கின

களனியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட மருந்து உற்பத்தி நிலையத்தின் மருந்துகள் கண்டுபிடிப்பு

by Staff Writer 24-07-2019 | 8:30 AM
Colombo (News 1st) களனி ரயில் நிலைய வீதி பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுத்துச் சென்ற மருந்து உற்பத்தி நிலையத்திலிருந்து விநியோகிக்கப்பட்ட சில மருந்துகள் நாட்டின் 12 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக, தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 10 வகையான மருந்துப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சபையின் ஔடதம் மற்றும் உணவு ஆராய்ச்சியாளர் அமித் பேரேரா குறிப்பிட்டுள்ளார். மருந்துப் பொருட்களைத் தயாரிக்கும் பொறுப்பை குறித்த நிலையத்திற்கு வழங்கிய மருந்து விநியோக நிறுவனமும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட 10 வகையான மருந்துப் பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத மருந்து உற்பத்தி நிலையத்தில், உற்பத்தி செய்யப்பட்ட பெருமளவான மருந்துகள் நீர்கொழும்பிலுள்ள மொத்த வியாபார நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 8ஆம் திகதி தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அதிகாரிகளினால் குறித்த மருந்து உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அங்கிருந்து காலாவதியான மருந்துகள் மற்றும் அதிக புரதச்சத்து கொண்ட பால்மா பக்கற்றுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.