பிரித்தானிய பிரதமராகவுள்ளார் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகவுள்ளார் போரிஸ் ஜோன்சன்

by Bella Dalima 23-07-2019 | 5:03 PM
பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவாகியுள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெரமி ஹன்ட்-ஐ வீழ்த்தி அவர் வெற்றி பெற்றுள்ளார். 87 வீதமாக அமைந்த வாக்கெடுப்பில் 66 சதவீத வாக்குகள் போரிஸ் ஜோன்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாததால், பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சனுக்கும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ட்-இற்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், வாக்கெடுப்பு நிறைவுபெற்று புதிய தலைவராக போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உடனடியாக பிரதமர் தெரசா மே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார்.