திருகோணமலையில் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 23-07-2019 | 7:24 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ள குழுவினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஆராய்ந்தனர். இன்று காலை பயணத்தை ஆரம்பித்த ஒரு குழுவினர், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னையடி கிராமத்திற்கு சென்றிருந்தனர். இந்த கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆறு ஒன்றைக் கடந்தே இந்த கிராமத்திற்குள் பிரவேசிக்க வேண்டியுள்ளதுடன், ஆற்றின் ஊடாக சுமார் 200 மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரேயொரு படகுப் பாதை மாத்திரமே உள்ளது. உப்புரல், சீனன்வௌி, இலங்கை துறைமுகத்துவாரம், புன்னையடி, கல்லடி, வாழைத்தோட்டம், முட்டுச்சேனை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அன்றாடம் இந்த ஆற்றுப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். படகுப் பாதை சேதமடைந்தால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என மக்கள் குறிப்பிட்டனர். இதனை அடுத்து, நல்லூர் கிராமத்திற்கு மக்கள் சக்தி குழுவினர் விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், குழந்தைகளுக்கான மாதாந்த சிகிச்சை முகாம் நடைபெற்று வந்தது. கிராமத்தில் பொது மண்டபமொன்று இல்லாத நிலையில், சேதமடைந்த கட்டடமொன்றிலேயே இந்த சிகிச்சை முகாம் நடத்தப்படுகின்றது. இதேவேளை, நல்லூர் கிராம மக்கள் பொது போக்குவரத்து வசதி மற்றும் நீர் வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளதுடன், காட்டு யானை தொல்லையையும் எதிர்நோக்கியுள்ளனர். மூதூர் பிரசேத செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் இதுவரையில் வழங்கப்படாத நிலையில், கொட்டில்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், மலசலக்கூடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் தமக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் கூறினர். திருகோணமலை - சம்புக்களி கிராம மக்கள் காட்டு யானைகளினால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, சம்பூர் கிராமத்திற்கும் மக்கள் சக்தி குழுவினர் இன்று விஜயம் செய்திருந்தனர். திருகோணமலை மக்களின் பிரச்சினைகளை ஆராயும் மற்றைய குழுவினர், குச்சவௌி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கல்லாறாவ, கல்லபெத்த, திரியாய, கும்புறுப்பிட்டிய உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சென்றிருந்தனர். மீனவ சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் கல்லாறாவ கிராமத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகளவில் காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டனர். அத்துடன், தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் மீன்பிடி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கல்லபெத்த கிராம மீனவர்களும், தென்னிலங்கை மீனவர்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த கிராமத்தில், பாடசாலை, குடிநீர், வீதிகள் உள்ளிட்ட வசதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரியாய கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். கிராமத்தில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது வேலி சேதமடைந்துள்ளது. தமக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக கும்புறுப்பிட்டிய கிராம மக்கள் குறிப்பிட்டனர். திருகோணமலை - கன்னியா மற்றும் மாங்கையூற்று கிராமங்களுக்கும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்ட குழுவினர் இன்று பயணித்திருந்தனர்.