தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

by Staff Writer 23-07-2019 | 1:42 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் 9 நாட்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ கணேசன் இன்று (23) முற்பகல் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் உண்ணாவிரதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கனகசபை தேவதாசனின் உடல்நிலை தொடர்பில் மருத்துவ அறிக்கை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு பிணை வழங்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்தார். 2 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட இவர் திரைப்படக் கூட்டுதாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார். தனக்கான வழக்கு விசாரணையின்போது, சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும் அதனால் போதுமான சாட்சியங்களை திரட்டமுடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கனகசபை தேவதாசன் கூறியுள்ளார். தனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தேவையான சாட்சியங்களைத் தன்னால் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட, அவற்றில் ஒரு வழக்கிற்கு ஆயுள் தண்டனையும் மற்றைய வழக்கிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.