மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 8:54 pm

Colombo (News 1st) மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் நடைபெற்றது.

இதன்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்ததாவது,

மஹேல, சங்கா, முன்னாள் அணித்தலைவர் சிதத் வெத்தமுனி, ரொஷான் மஹநாம போன்ற சிரேஷ்ட வீரர்கள் சிலரை இணைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் எம்மிடம் இருந்தன. அந்த அறிக்கையை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்

என குறிப்பிட்டார்.

இதேவேளை, கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமை தொடர்பாக நேற்று (22) நியூஸ்ஃபெஸ்ட் செய்தியொன்றை ஒளிபரப்பி இருந்தது.

வாய்மூல பதிலை எதிர்பார்த்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தகவல் வழங்கும் போது சில தகவல்களை மறைக்க முயற்சித்துள்ளதென செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட ஒளிபரப்பு உரிமைக்காக தரகுப் பணம் வழங்கப்பட்ட தொகை தென் ஆபிரிக்க விஜயத்திற்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய இறுதிக்கொடுப்பனவான ஒரு இலட்சத்து 87 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகையில் இரண்டு மடங்காகும்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய பதிலில் குறிப்பிடப்பட்டிருந்த 35,910 அமெரிக்க டொலரை விட சுமார் பத்து மடங்கு கொண்ட 3 இலட்சத்து 29 ஆயிரத்து 24 டொலர் நிதி குறித்து பதிலில் தெரிவிக்கப்படாததை நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

இது குறித்து ஹரீன் பெர்னாண்டோ கூறியதாவது,

நானும் உங்களுடைய செய்தியில் பார்த்தேன். நீங்கள் கூறிய பின்னர் நான் இன்று செயலாளரிடம் அது தொடர்பாக பரிசீலிக்குமாறு கோரினேன். அப்படி பொய்யாக செயற்பட்டிருந்தால் அது பாரியதொரு பிரச்சினையாகும். கிரிக்கெட்டிற்கு வர முயற்சிப்பவர்களுக்கு இருக்கும் ஆர்வமாக இந்த ஒளிபரப்பு உரிமை உள்ளது. இது தொடர்பாக முடியுமான வரை விரைவாக பரிசீலனை நடத்துமாறு நாம் கோரியுள்ளோம். அது பாரியதொரு பிரசசினையாகும். நீங்களும் வந்து சாட்சியமளிக்க வேண்டிவரும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்