பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க தீர்மானம் - ராஜித சேனாரத்ன

by Staff Writer 22-07-2019 | 9:12 PM
Colombo (News 1st) பெருந்தோட்டங்களில் காணப்படும் அனைத்து வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சுகாதார அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) நடைபெற்றபோது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதனூடாக அரசாங்கத்தின் நிதியில் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொண்டு சிறந்த வைத்திய சேவை கட்டமைப்பொன்றை உருவாக்கவுள்ளோம். தோட்ட வைத்தியசாலைகளை கட்டம் கட்டமாகப் பொறுப்பேற்கவுள்ளோம். வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் எண்ணக்கருவின் கீழ் அவை பொறுப்பேற்கப்படவுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளைப் பொறுப்பேற்று அவை காணப்படும் மாகாண சபைகளுக்கு வைத்தியசாலைகளை கையளிக்கவுள்ளோம். அதற்குத் தேவையான நிதி உதவியை மத்திய அரசாங்கம் வழங்கவுள்ளது. சுகாதாரத்துறையை பொருத்தமட்டில் மத்திய மற்றும் மாகாண ரீதியில் எவ்வித பிளவுகளும் இல்லை. சுகாதார சேவை என்றவுடன், பொதுமக்கள் அதனை பொதுவான ஒன்றாகவே கருதுகின்றனர். இதன் காரணமாக, மாகாண சபைகளின் கீழ் காணப்படும் சிக்கல்களை தீர்த்து, சிறந்த சுகாதார சேவையை வழங்க திட்டமிட்டுள்ளளோம். குறித்த வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவர்கள், ஊழியர்கள், வாகனங்கள் மற்றும் அம்பியூலனஸ் வண்டி ஆகியவற்றை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.