கன்னியா வெந்நீருற்று தொடர்பில் இடைக்காலத் தடை உத்தரவு

by Staff Writer 22-07-2019 | 7:40 PM
Colombo (News 1st) திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன், கேசவன் சயந்தன் மற்றும் உ. பிரசாந்தன் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர். கன்னியா வெந்நீரூற்றில் விகாரை கட்டுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் அங்கு பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு மற்றும் குறித்த காணியில் புனர்நிர்மாணம் மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்குமாறு இன்று மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்குமாறும் அங்கு செல்வதற்கான அனுமதிப் பற்றுச்சீட்டு விநியோகிப்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று உத்தரவிடுமாறும் மனுதாரர்களால் கோரப்பட்டமைக்கு அமைய, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், இந்த கோரிக்கைகள் தொடர்பில் இன்று இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். அதற்கமைய, கன்னியா வெந்நீரூற்றில் விகாரை கட்டவும் பிள்ளையார் கோயிலை நிர்மானிக்கவும் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார். பிள்ளையார் கோயில் கட்ட அனுமதிக்குமாறு கோரப்பட்ட போதிலும், அந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். வழக்கின் இறுதியில் அதற்கான கட்டளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பிள்ளையார் கோயில் இருந்த மேட்டுப் பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடம் என வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கின் மனுதாரராக கன்னியா வெந்நீரூற்று ஆலய நிர்வாகி கோகில ரமணியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், எதிர் மனுதாரர்களாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.