சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

by Staff Writer 22-07-2019 | 4:45 PM
Colombo (News 1st) இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலம் இன்று (22) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான நேரக்கணிப்பீடு நேற்று மாலை 6 மணி 43 நிமிடம் முதல் ஆரம்பமாகியது. கடந்த 15ஆம் திகதி விண்ணில் ஏவப்படவிருந்த சந்திரயான்-2 விண்கலம், இறுதி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, இன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விண்கலம் இதுவாகும். 150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கும் பட்சத்தில் விஞ்ஞான ரீதியாக அனுகூலம் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த விண்கலம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.