4/21 தாக்குதல்: இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு

ஏப்ரல் 21 தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு

by Staff Writer 22-07-2019 | 2:56 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பயங்கரவாதத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்த குடும்பங்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இதுவரை 285 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த 43 வௌிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லை என, சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த 263 பேரில், 201 பேரின் உறவினர்கள் இழப்பீடுகளுக்கு விண்ணப்பித்ததுடன் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்தவர்களுக்காக 87 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இழப்பீடு தொடர்பில் தொடர்ந்தும் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.