தபால் சேவையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 21-07-2019 | 8:19 AM
Colombo (News1st) இன்று (21) நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. நியமனங்கள் குறித்து எழுந்த பிரச்சினைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை பெற்றுக் கொடுக்காமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த வருடம் 16 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதற்கு இணங்க, தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், அதனை அமைச்சரவையின் அனுமதியுடன் ஜூலை மாதம் முதல் அமுல்படுத்துமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தபால் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இதுவரை தமது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை என சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடனும் அமைச்சின் செயலாளருடனும் பல தடவைகள் கலந்துரையாடியதாக சங்கத்தின் பிரதம செயலாளர் எஸ்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால் இன்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ள ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் மீண்டும் ஒருதடவை சிந்திக்குமாறு தபால்சேவை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.