மீனவர்களுக்குத் தொடர்ந்தும் எச்சரிக்கை

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை

by Staff Writer 21-07-2019 | 7:24 AM
Colombo (News 1st) மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என, கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் தொடர்ந்தும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்தக் கடற்பிராந்தியங்களை மறுஅறிவித்தல் வரை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கடும் காற்று காரணமாக கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாலைதீவை சென்றடைந்த 20 மீனவப் படகுகளையும் வானிலை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் காற்றுடன் கூடிய வானிலை எதிர்வரும் தினங்களில் குறைவடையக்கூடும் எனவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு (21) 9 மணி வரை அமுலில் காணப்படும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஆகவே, மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்