Sri Lanka Glory-இல் இருந்த எரிபொருள் அகற்றப்பட்டது

விபத்திற்குள்ளான Sri Lanka Glory கப்பலில் இருந்த எரிபொருள் அகற்றப்பட்டது

by Staff Writer 20-07-2019 | 8:30 PM
Colombo (News 1st) கடும் காற்றுடன் கூடிய வானிலையால் காலி கடற்பகுதியில் விபத்திற்குள்ளான Sri Lanka Glory என்ற சரக்குக் கப்பலிலுள்ள எரிபொருளை இறக்குவதற்கான நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. கப்பலிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த 18 ஆம் திகதி மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய காலநிலையால் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்த இடத்திலிருந்து விலகி, ரூமஸ்வல கடற்பரப்பிற்கு அடித்துச் செல்லப்பட்டிருந்ததுடன், அதிலிருந்தவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டிருந்தனர். குறித்த கப்பலில் சுமார் 15 தொன் டீசல் காணப்பட்டதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது. கப்பல் ஒதுங்கிய பகுதி பவளப்பாறைகள் அடங்கிய சூழலைக் கொண்டுள்ள வலயம் என்பதால், மசகு எண்ணெய் கசிந்தால் அது கடல் மாசடைவை ஏற்படுத்தும் அபாய நிலை காணப்படுகிறது. இதனால் கப்பலிலுள்ள எண்ணெய்யை இறக்குவதற்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.