மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

by Staff Writer 20-07-2019 | 3:45 PM
Colombo (News 1st) மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பெ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலையால் இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஆகவே, மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் சிரேஷ்ட நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர கூறியுள்ளார்.