சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வௌிநாட்டுக் கழிவுகள்: அரசியல்வாதிகள் ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டு

by Staff Writer 20-07-2019 | 9:01 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்திலுள்ள நபர்கள் மற்றும் நிறுவனம் தொடர்பில் தற்போது மேலும் பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன. கட்டுநாயக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளின் காணொளியை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஊடகங்களுக்கு தற்போது வௌியிட்டுள்ளது. மழை காரணமாக சில கழிவுகள் பூஞ்சணமாகியுள்ளதுடன், பாசி படிந்துள்ளது. கழிவுகளில் இருந்து வௌியேறும் கழிவு நீர் வடிகாண் கட்டமைப்பிற்கு வழிந்தோடுவதையும் காணக்கூடியதாக உள்ளது. கழிவுகள் சுத்திகரிப்பு கட்டமைப்பொன்று இந்த பகுதியில் செயற்படுத்தப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. காற்று காரணமாக கழிவுத்துகள்கள் சூழலுடன் கலப்பதாகவும் அதிகார சபை கூறியுள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தின் நான்காம் இலக்கப் பிரிவில் அமைந்துள்ள Hayleys Free Zone Limited நிறுவனத்தால் இந்த கழிவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிக்கையொன்றை வௌியிட்டு நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான செயற்பாட்டிற்கு தேவையான சுற்றாடல் அல்லது அபாயகரமான கழிவுகள் தொடர்பான அனுமதிப்பத்திரம், குறித்த நிறுவனத்திடம் இல்லை என அதிகார சபை தெரிவித்துள்ளது. 130 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 27,685 மெட்ரிக் தொன் கழிவுகள், 50,000 அடி வரையில் குவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. தேசிய கழிவுகள் முகாமைத்துவ கொள்கைக்கு அமைய, அபாயகரமான கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட நாட்டிற்கு உடனடியாக திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கட்டுநாயக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்திற்குள், மீள் ஏற்றுமதி நடவடிக்கை நிலையமாக இந்த நிறுவனம் செயற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, நிறுவனம் அல்லது வர்த்தகமொன்றை ஆரம்பிப்பதற்கு, முழுமையான முதலீட்டின் குறைந்தபட்சம் 65 வீதம் வௌிநாட்டு மூலங்களின் ஊடாக முதலீடு செய்யப்பட வேண்டும். அத்துடன், புதிய வர்த்தகத்தின் ஊடாக 5 மில்லியன் அமெரிக்க டொலர், அதாவது 878.9 மில்லியன் ரூபா குறைந்தபட்ச முதலீட்டுடனான உடன்படிக்கையில் குறித்த நிறுவனம் மற்றும் முதலீட்டு சபை கையொப்பமிட வேண்டும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இங்கிலாந்தில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய 102 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் CICD முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடக சந்திப்பில் விடயங்களை முன்வைப்பதற்கு இலங்கை சுங்கத்தினர் தயாராகியுள்ளனர். இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, அரசியல்வாதிகள் ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.