கிளிநொச்சியில் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 20-07-2019 | 8:12 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மக்கள் சக்தி குழுவினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரங்கன் குடியிருப்பிற்கு சென்றனர். இந்த கிராமத்தில் 103 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், யானைகளின் அச்சுறுத்தலால் தாம் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக மக்கள் குறிப்பிட்டனர். காட்டு யானை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் மக்கள் சக்தி குழுவினர் கிளிநொச்சி - புதுக்காடு மாவடி கிராமத்திற்கு சென்றனர். மீள்குடியேற்றப்பட்டு 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னும் குடிசை வீடுகளில் இந்த மக்கள் வாழ்வதைக் காண முடிந்தது கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணை மாதா நகர் மற்றும் நாச்சிக்குடா பகுதிகளுக்கும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் இன்று சென்றிருந்தனர். இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணை மாதா நகரில் குடியேறினர். சொந்த இடமான இரணைத்தீவு விடுவிக்கப்பட்டபோதிலும், அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் பொருட்களை நுகர்வதற்கான வசதிகளற்ற நிலையில் வாழந்து வருகின்றனர். இதனால் இரணைத்தீவிலிருந்து படகு மூலம் இரணை மாதா இறங்குதுறைக்கு வந்து, அங்கிருந்து முழங்காவில் பகுதிகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இரணை மாதா நகரிலுள்ள இறங்குதுறை நீண்டகாலமாக புனரமைக்கப்படாதுள்ளதாகவும் இரவில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வசதியாக வெளிச்ச விளக்கு இல்லை எனவும் மக்கள் கூறினர். இரணைத்தீவிலிருந்து இரணை மாதா நகருக்கு போதிய படகு சேவையின்மையால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, மாத்தளை மாவட்டத்திற்கும் காலி மாவட்டத்திற்கும் மக்கள் சக்தி குழுவினர் இன்று பயணித்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.