விபத்திற்குள்ளான கப்பலால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பொனவிஸ்டா பவளப்பாறை

by Staff Writer 19-07-2019 | 7:35 PM
Colombo (News 1st) காலியில் விபத்திற்குள்ளான சரக்குக் கப்பல் ருமஸ்ஸல கடற்பரப்பில் தொடர்ந்தும் காணப்படுவதால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்லும் Sri Lanka Glory என்ற இந்த கப்பல் நேற்று (18) மாலை காலி துறைமுகத்திற்கு வௌியே நங்கூரமிடப்பட்டிருந்தது. நேற்று மாலை நிலவிய பலத்த காற்றுடன் கூடிய வானிலையை அடுத்து, கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ருமஸ்ஸல கடற்பரப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். ருமஸ்ஸல சரணாலயம் மற்றும் Bonavista பவளப்பாறையை அண்மித்த பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.  இதனை உலக மரபுரிமையாக யுனெஸ்கோ அமைப்பு பெயரிட்டுள்ளது. அவ்வாறான நிலையிலேயே, இந்த கப்பல் அங்கு விபத்திற்குள்ளாகியுள்ளது. சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப்குமார இன்று கப்பலை கண்காணித்ததுடன், கப்பல் பவளப்பாறைக்கு அருகில் காணப்படுகின்றமையால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் கூறினார்.