மன்னாரில் கி.பி.13 ஆம் நூற்றாண்டிற்குரிய இந்து ஆலயம் கண்டுபிடிப்பு

by Staff Writer 19-07-2019 | 8:03 PM
Colombo (News 1st) மன்னார் - குருந்தன்குளம் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் போது கி.பி.13 ஆம் நூற்றாண்டிற்குரிய இந்து ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், உதவி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை இணைப்பாளர், பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்ததாவது,
அந்த இடத்தில் வரலாற்று பழமைவாய்ந்த ஆதாரங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆய்வை மேற்கொண்டு இருந்தோம். அந்த நோக்கம் நிறைவு பெற்றதாகக் கருதுகின்றோம். அங்கு பாழடைந்த ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. அது கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம், பலி பீடம் என்பவற்றைக் கொண்ட பெரிய ஆலயமாகும். அங்கு கருங்கற்கள் கிடைக்கக்கூடியதாக இருந்தும் செங்கற்களாலும் சுண்ணாம்பு சுதை கொண்டும் கட்டப்பட்டுள்ளது. கற்பக்கிரகத்தின் மேல் இருந்த விமானம் இடிந்து வீழ்ந்துவிட்டது போல் தெரிகின்றது. முன் மண்டபம் முற்றாக சேதமடைந்து குவியல்களாக காணப்படுகின்றன. இங்கு எந்த வழிபாட்டு முறை இருந்தது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் இங்கு வைக்கப்பட்டிருக்கும் நாகக்கல் ஆலயம் எந்த காலத்திற்குரியது என்பதை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
என குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்