தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளருக்கு விளக்கமறியல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் சமன் திசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 19-07-2019 | 5:39 PM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கொடவில் பதில் நீதவான், சட்டத்தரணி திஸ்ஸ விஜயரத்ன ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்று சந்தேகநபரை கண்காணித்ததன் பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி சந்தேகநபரை காலி நீதவான் முன்னிலையில் ஆஜராக்குமாறும், ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பான மருத்துவ சான்றிதழை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டார். அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுத்து சென்றமை தொடர்பில் போதுமான சாட்சியங்கள் காணப்படுகின்றமையால், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சமன் திசாநாயக்கவை கைது செய்து காலி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.