குப்பைகளை கொணர்ந்த நிறுவனத்திற்கு அனுமதி இல்லை

கட்டுநாயக்கவிற்கு குப்பைகளைக் கொண்டு வந்த நிறுவனத்திற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை

by Staff Writer 19-07-2019 | 10:09 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தின் நான்காம் இலக்கப் பிரிவில் அமைந்துள்ள Hayleys Free Zone Limited நிறுவனத்தால் கழிவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாட்டிற்குத் தேவையான சுற்றாடல் அல்லது அபாயகரமான கழிவுகள் தொடர்பான அனுமதிப் பத்திரம், குறித்த நிறுவனத்திடம் இல்லை என அதிகார சபை தெரிவித்துள்ளது. மெத்தைகள் என கூறி வௌிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 130 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவன வளாகத்தில் காணப்படுகின்றன. மேலும், 102 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் CICD முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது சுங்கப்பிரிவினர் பொறுப்பிலுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்கவின் கையொப்பத்துடன் இன்று மாலை வௌியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, கட்டுநாயக்கவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் பாதுகாப்பாற்ற வகையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த கழிவுப்பொருட்களில் இருந்து திரவங்கள் மற்றும் துகள்கள் சுற்றாடலில் விடுவிக்கப்படுவதாக அப்பகுதியை சோதனையிட்ட சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 130 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 27,685 மெட்ரிக்தொன் கழிவுகள் 50 ஆயிரம் அடி வரை குவிக்கப்பட்டுள்ளன. தேசிய கழிவுகள் முகாமைத்துவ கொள்கைக்கு அமைய, அபாயகரமான கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட நாட்டிற்கு உடனடியாக திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சூழல் மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் குறித்த நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உரிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால், தேசிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைய குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கட்டுநாயக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்திற்குள், மீள் ஏற்றுமதி நடவடிக்கை நிலையமாக இந்த நிறுவனம் செயற்பட்டுள்ளதாக சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.